மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானின் உடல், பீஹார் தலைநகர் பாட்னாவில், அரசு மரியாதையுடன், இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவு காரணமாக, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.

அப்போது, மறைந்த ராம்விலாஸ் பஸ்வானுக்கு, இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.பின், பஸ்வானின் மறைவுக்கு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், பஸ்வானின் உடல், அவரது சொந்த மாநிலமான பீஹார் தலைநகர் பாட்னாவில், அரசு மரியாதையுடன், இன்று அடக்கம் செய்யப்படும் என்றும், மத்திய அரசு சார்பில், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்பார் என்றும், கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடல், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டு இருந்தது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.'சமூக நீதிக்காக, சமரசமின்றி போராடும் பஸ்வானின் உறுதி, என்றும் நினைவில் இருக்கும்' என, பிரதமர் மோடி, 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்தார்.