தமிழகத்தில் நடப்பது பாஜகவின் பினாமி ஆட்சி என்றும், தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி, அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நீண்டநாள் இழுபறிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், பன்னீர் அணி சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அணிகள் இணைப்பின்போது, எம்.பி. வைத்தியலிங்கம் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனால் 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக போர்கொடி தூக்கிவிட்டு தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

மேலும், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் அளித்தனர்.

இதனால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போதைய ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரின் பதிலை எதிர்பார்த்த நிலையில் உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்கட்சிகளும், அதிமுக அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தோற்றுப்போவோம் என்ற பயம் அதிமுகவுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நடப்பது பாஜகவின் பினாமி ஆட்சிதான். தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி, அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றார். தமிழகத்தில் தேர்தல் வர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.