பிரதமர் சென்னை வந்த போது முதலமைச்சர் பேசிய ஆங்கிலத்தை பார்த்து பிரதமர் பயந்து டெல்லிக்கு சென்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திமுக-பாஜக மோதல்
திமுக- பாஜக இடையே கடந்த சில மாதங்களாக கடும் கருத்து மோதல் ஏற்படுட்டு வருகிறது. திமுக மீது பாஜக குற்றம்சாட்டுவதும் அதற்க்கு திமுக பதில் அளிப்பதும் தினந்தோறும் வாடிக்கையாகிவிட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ தமிழக அரசிற்கு சவால் விடுக்கும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். மின் வாரியத்தில் முறைகேடு, துபாய் பயணத்தில் முறைகேடு, உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களையும் திமுக மீது கூறி வருகிறார். இந்தநிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த நிலையில் மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் இதனை திமுக அரசு ஏற்க மறுத்துள்ளது. மாநில அரசுகளிடம் கேட்காமல் விலையை உயர்த்தி விட்டு விலையை குறைக்க கூறுவது தான் கூட்டாட்சியா என கேள்வி எழுப்பினர். இந்தநிலையில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதியான பெட்ரோல்,டீசல் விலை குறைப்பை நிறைவேற்ற கோரி தமிழக அரசிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 72 மணி நேர கெடு கொடுத்திருந்தார்.

பொய் பேசிய முதலமைச்சர்
இந்தநிலையில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி நடத்தியது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். மத்திய அரசு வளர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூறினார். ஆனால் தமிழக அரசோ கஞ்சா ஆப்ரேசன் ஒன்று, இரண்டு என தொடர்ந்து நடத்தி வருவதாக கூறினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் கஞ்சா ஆப்ரேசன் 35 நடத்துவார்கள் என விமர்சித்தார். பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பிரதமரை மேடையில் வைத்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய அனைத்தும் தவறான புள்ளி விவரங்கள் என தெரிவித்தார். மேலும் இது போன்ற பொய்யை கேட்க தமிழக மக்கள் தயாராக இல்லையென கூறினார்.

முதல்வரின் ஆங்கிலத்தை பார்த்து பயந்த மோடி
தொடர்ந்து பேசிய அண்ணாமலை,, தமிழக நிதி அமைச்சர் எங்கே சென்று தேர்வு எழுதினாலும் பெயில் ஆகும் மாணவர், அமெரிக்காவில் இரண்டு பேங்கில் பரிட்சை எழுதிவிட்டு இரண்டையும் கவுத்திவிட்டு தமிழகம் வந்துள்ளதாக விமர்சித்தார்.பள்ளி குழந்தைகள் எல்லோரும் ரைம்ஸ் பாடுவது போல் தமிழக அமைச்சர்களும் எங்களுக்கும் ஆங்கிலம், ஆங்கிலம் தெரியும் என அமைச்சர்கள் பேசியதாக கூறினார், அமைச்சர்கள் பேசும் ஆங்கிலத்தை பார்த்து பயமாக இருப்பதாகவும் கூறியவர், பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசிய ஆங்கிலத்தை பார்த்து தான் பிரதமர் டெல்லிக்கு சென்றதாக கூறினார், முதல்வரின் ஆங்கிலத்தை பார்த்து பிரதமர் மட்டுமில்லாமல் தமிழக மக்களும் பயந்ததாக விமர்சித்தார். எனவே மக்களை எந்த மொழி படிக்க விருப்பமோ அதை படிக்க விடுங்கள் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
