அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் தலைமை நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

முக்கிய அமைச்சர்கள் தலையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி மற்றும்  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனிசாமி,  தேர்தல் கமிசன் சில கருத்துக்களை கேட்டுள்ளது.  அது குறித்து சட்டத் துறை அமைச்சரிடம்  பேசினோம். தேர்தல் பணியை நீண்ட காலத்துக்கு முன்பாகவே தொடங்கிவிட்டோம். முதல்வர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக  உரிய காலத்தில் உரிய நேரத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முருகன் தெளிவுபடுத்தியுள்ளார். அவரே அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதை ஒத்துக்கொண்டுள்ளார். 

 

எனவே கூட்டணி குறித்த கேள்வியே தேவையில்லை என்று கூறினார். மேலும் சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் அனைத்து செயல்பாடுகளும் முறையாக நடைபெற்று வருவதாகவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும், பாஜக தேசிய கட்சி என்பதால் அதன் தலைமையில் கூட்டணி அமைவதே சரி எனவும் அக்கட்சியின் மாநிலத்துணைத் தலைவர் வி.பி துரைசாமி கூறியிருந்த நிலையில் கே.பி முனுசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.  மேலும் வி.பி துரைசாமியின்  கருத்து, அதன் கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் அதன் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கே.பி முனுசாமி வி. பி துரைசாமியை கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடதக்கது.