பாஜகவின் சித்தாந்தம் பெண்மைக்கு எதிரானது. ஜனகரின் மகள் கற்புக்கரசி சீதையையே தீக்குளிக்க சொன்னவர்கள் அவர்கள் என ஜோதிமணி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் முன்றாம் தரப்பெண் என இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘’நேற்று நியூஸ் 7 தொலைகாட்சியில் காங்கிரஸ் நாடாளுமன்ற  உறுப்பினர் செல்வி ஜோதிமணியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் பாஜக நிர்வாகியுடன் விவாத்த்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். விவாதத்திற்கிடையில் சகோதரி ஜோதிமணியை பார்த்து ,”நீ அருகதை அற்றப் பெண், நீ யோக்கியதை அற்றப் பெண் மற்றும் மூன்றாம்தரப் பெண்” என்ற கீழ்மையான வார்த்தைகளால் நேர்மையற்ற முறையில் பாஐகவை சேர்ந்த கரு.நாகராஐன் தூற்றி பேசியிருக்கிறார்.

பாஜகவின் சித்தாந்தம் பெண்மைக்கு எதிரானது. ஜனகரின் மகள் கற்புக்கரசி சீதையையே தீக்குளிக்க சொன்னவர்கள் அவர்கள். பொதுவெளியில், இந்த 21ம் நூற்றாண்டில் ,பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவாகப் பேசுகிற பாரதிய ஐனதா நண்பர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் சமூகம் அவர்களுக்கு நல்லப் பாடத்தை புகட்டும் என தமிழக காங்கிரஸ் மிக கடுமையாக தெரிவித்துக்கொள்கிறது’’ எனத் தெரிவித்துள்ளர்.