கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டில் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவர் என உலக வங்கி எச்சரித்துள்ளது  மொத்தத்தில் 82% நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த நிலை இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு சீனாவின் வூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் 1.63 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுமார்  2. 74 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா,பிரேசில், ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. 

இன்னும் ஒரு சில வாரங்களில் தற்போது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவையே இந்தியா பின்னுக்கு தள்ளக் கூடுமென அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உலக வங்கி அதிர்ச்சி தரக்கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்திலிருந்து மீண்டு வர வணிகங்கள் மற்றும் பிற துறைகளில் புதுமையை புகுத்த வேண்டும். கொரோனா தொற்று இந்த ஆண்டு கூடுதலாக 8.8 கோடியில் இருந்து 15 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் தள்ளும். 2021 ஆம் ஆண்டில் வறுமையில் உழலக் கூடிய மக்களின் எண்ணிக்கை 150 மில்லியனாக இருக்கும். அதாவது 15 கோடியாக வாய்ப்புள்ளது. அதேபோல உலக நாடுகள் கொரோனாவுக்கு பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்திற்கு தயாராக வேண்டும் எனவும், பல நடுத்தர வருமான நாடுகளில் கணிசமான மக்கள் தீவிர வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் 82% நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த நிலைமை இருக்கும் என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா நோயானது கால நிலை மாற்றங்களின் அழுத்தங்களுடன் ஒன்றிணையும் என்றும், மேலும் இது 2030 ஆம் ஆண்டளவில் வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இலக்கை குறிப்பிடத்தக்க மற்றும் கணிசமான கொள்கை நடவடிக்கை இல்லாமல் அடைய முடியாது என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலக வறுமை விகிதம் 7% அளவுக்கு இருக்கலாம், அதேபோல உலக வங்கியின் அறிக்கையில் இந்தியாவுக்கான சமீபத்திய தரவு இல்லாதது உலகளாவிய வறுமையை கண்காணிக்கும் திறனை தடுக்கிறது என உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது  குறிப்பிடதக்கது.