மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கட்சியின் சீனியர்களான முன்னாள் துணை சபா தம்பிதுரை, கேபி முனுசாமி, கோகுல இந்திரா உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு பதவி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ஜான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மீதமுள்ள ஒரு பதவியை தொகுதி உடன்பாட்டில் சொன்னதைப்போல கூட்டணிக்கட்சியான பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவிடம் ஏழு சீட் வாங்கி மொத்த தொகுதிகளையும் பறிகொடுத்த பாமகத்திற்கு ஒப்பந்தத்தின் படி ராஜ்யசபா சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சூழல் நிலவியது. ஏனென்றால் என்னதான் ஒப்பந்தம் போட்டாலும் வாங்கிய 7 தொகுதிகளையும் அனாமத்தா இழந்ததால் எப்படி ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என கட்சி சீனியருக்குள் எழுந்தது. அதுமட்டுமல்ல, என்னதான் வட மாவட்டங்களில் வலுவான வாக்குவங்கி இருந்தாலும் அந்த வாக்கு விழவில்லை, இப்படி அவர்களின் சப்போர்ட் நமக்கு கைகொடுக்காத நிலையில் எப்படி 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவை கொடுத்து எம்பியாக்குவது என அதிமுகவினர் புலம்பினார். 

அதிமுக ஐடியா தெளிவாக இல்லாத இந்த கேப்பில், திமுக பக்கம் சாய்வதைப்போல தனது முகநூல் பக்கத்தில் கலைஞருக்கும் தனக்கும் உள்ள நட்பு போன்ற பழைய தகவல்களை பகிர்ந்து வந்தார். இதனால் ஷாக்கான அதிமுக  ராமதாஸை சமாதானப்படுத்தும் விதமாக தேர்தல் உடன்பாடு போட்டபோதே சொன்னதைப்போல பாமகவுக்கு அந்த ஒரு சீட் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதிப்படுத்தினார். 

இதனைத் தொடர்ந்து தேர்தல் ரத்ததான வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை மனதில் வைத்து (வட மாவட்டங்களில் பாமகவின் பலமான வாக்குவங்கி ) நேற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பாமகவுக்கு ஒப்பந்தத்தில் சொன்னதைப்போல ஒரு சீட் தர இருப்பதாக  சொன்னார். இந்த பேட்டியைப் பார்த்த பாமக நிம்மதியாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் தோல்வி அடைந்த அன்புமணி, அதிமுக தயவில் ராஜ்யசபா எம்.பி.யாக ஆகப்போகிறார் என்ற குஷியில் இருக்கும் ராமதாஸ் சட்டசபையில் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய உரையை பாராட்டி ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அவர் புகழ்ந்த இரண்டே நாட்களில் கைமேல் கிடைத்த பலனாக சொன்னதைப்போலவே சொன்ன சொல்லக் காப்பாற்றிவிட்டனர் ஓபிஎஸ் இபிஎஸ். அதாவது மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் 2 வேட்பாளர்களை அறிவித்தனர். அதில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,  கழக துணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிச்சாமி என இருவரும் கையெழுத்துப்போட்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த அறிக்கையைப் பார்த்த தைலாபுரம் துள்ளிக்குதித்தாலும், சீட் கிடைக்காத அதிமுக சீனியர்கள் மற்றும் கூட்டு சேர்ந்து தோற்றுப்போன தேமுதிக, பாமக மீதும் தர்மபுரியில் தோற்றாலும் வெயிட்டான ஜாக்பாட் அடித்த அன்புமணி மீதும்  காண்டில் இருக்கிறார்களாம்.