இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்த பிரதமர் மோடி, பாராளுமன்ற மரபுப்படி, என்னை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். ஆனால் அப்போது...
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியால் என்னை அறிமுகம் செய்ய விடாமல் தடுத்தது காங்கிரஸ் மற்றும் திமுக என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்ணீர் மல்க பேசினார்.

கோவையில் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை அவர் இன்று துவங்கினார். அப்போது பேசிய அவர், ‘’இந்திய வரலாற்றில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த 12 பேர் இணை அமைச்சர் பதவி பெற்றுள்ளனர். உண்மையான சமூக நீதியை போற்றுபவர் நரேந்திரமோடியும், பாஜகவும் தான். நான் ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவன். (அழுதுகொண்டே..) ஆனால் என்னை அறிமுகம் செய்யவிடாமல் தடுத்தது காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான். இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்த பிரதமர் மோடி, பாராளுமன்ற மரபுப்படி, என்னை அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.
அப்படி ஒரு ஏழைக்குடும்பத்தை சார்ந்த அமைச்சரை அறிமுகம் செய்து வைக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி வேலை செய்தது காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சி, மற்றும் தமிழகத்தில் இருக்கிற எதிர்கட்சி எம்.பி.,க்கள். ஏன் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தை சார்ந்த ஒருவர் மத்திய அமைச்சர் ஆகக்கூடாதா..? மத்திய அமைச்சரவையில் திமுக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அங்கம் வகித்தது. அப்போது ஒரு ஏழைக்குடும்பத்தை சார்ந்தவர்களை மத்திய அமைச்சர் ஆக்கினார்களா? சாதாரண குடும்பத்தை சார்ந்த என்னை மத்திய அமைச்சராக்கிய மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’’என அவர் தெரிவித்துள்ளார்.
