vetrivel case investigate on high court in chennai

பொதுக்குழுவை கூட்ட எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை என கூறி பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேலின் மேல் முறியீட்டு மனு மீதான விசாரணையில் இரு தரப்பின் வாதம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. 

எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி அறிவித்தார். 

இதற்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்தால் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

இதையடுத்து நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து டிடிவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. 

அதில், பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரனுக்கு தான் அதிகாரம் உள்ளது எனவும் எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை எனவும் வெற்றி வேல் தரப்பில் கூறப்பட்டது. 

மேலும், பொதுக்குழு அழைப்பிதலில் அனுப்புனர் இடத்தில் பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 
அதிமுக பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்து வாதத்தை தொடர்ந்த எடப்பாடி தரப்பு இரு அணிகள் இணைப்பு குறித்து பேச பொதுக்குழுவை கூட்டுவதாகவும், நாங்கள் பேசக்கூடாது என கூற அவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பினர். 

பொதுகுழு உறுப்பினராக இல்லாதா டிடிவியிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து தேர்தல் ஆணையத்தை வெற்றிவேல் ஏன் அனுகவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தரப்பு இரு அணிகள் இணைப்பு குறித்து தேர்தல் அங்கீகரிக்கவில்லை எனவும், கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் டிடிவியை தான் தொடர்பு கொள்கிறது எனவும் வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.