அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பு செல்லும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, அரசு தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், விமர்சனமும் எழுந்தது.இந்நிலையில், பி.இ., படிப்பில் அரியர் வைத்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க ஏஐசிடிஇ மறுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா, ‛அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதில் ஏ.ஐ.சி.டி.இ விதியாக உள்ளது. விதியை மீறினால், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும்' எனக் கூறினார்.இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், ‘’அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏ.ஐ.சி.டி.இ-ன் கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது’’ என அவர் தெரிவித்தார்.