The announcement comes as soon as the position of General Secretary of Sasikala void - Panneerselvam hope
சசிகலா பொதுச்செயலாளர் நியமனம் குறித்து டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு பதிலை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது எங்களுக்கு முதல் வெற்றி எனவும், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் செல்லாது என விரைவில் அறிவிப்பு வரும் எனவும் ஓ.பி.எஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அதிமுகவில் பல குழப்பங்கள் நீடித்து வந்தது. இதையடுத்து சசிகலா பிடியில் இருந்த ஓ.பி.எஸ் வெளியே வந்து தீப்பொறியாய் வெடித்தார்.

இதனால் ஓ.பி.எஸ் ஆதாரவாளர்களை சசிகலாவும், சசிகலா குடும்பத்தினரை ஓ.பி.எஸ் தரப்பும் நீக்குவதாக மாறி மாறி அறிக்கை விடுத்தனர்.
ஓ.பி.எஸ் அணி ஒரு படி மேலே போய் தேர்தல் ஆணையத்தில் சசிகலா அதிமுக சட்ட விதிகளை மீறி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அந்த தேர்வு செல்லாது எனவும், அதிமுக வரலாற்றில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லை எனவும் கூறி மதுசூதனன் தலைமையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதனால் சசிகலாவை பிப்ரவரி 28 க்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் உள்ளதால் அவருக்கு பதிலாக அவரது உறவினரான டி.டி.வி தினகரன் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் அதிமுக விதிப்படியே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தினகரன் அளித்த பதிலை ஏற்க முடியாது எனவும், அதிமுகவில் தினகரன் எந்த பொறுப்பிலும் இல்லை எனவும், கட்சியில் அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதில் அளிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இதுகுறித்து ஓ.பி.எஸ் தனது இல்லத்தில் ஆதரவாளர்களிடையே பேசினார். அப்போது தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருப்பது சசிகலா நியமித்த எந்த பொறுப்பும் செல்லாது என்பதற்கு முதல் எடுத்துகாட்டு எனவும், நமது அணிக்கு கிடைத்த முதல் வெற்றி எனவும் தெரிவித்தார்.
மேலும் இதேபோல், சசிகலா பொதுச்செயலாளர் பதவியும் செல்லாது என விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஓ.பி.எஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
