Asianet News TamilAsianet News Tamil

ஆளுமைப் பண்பு இல்லாத அதிமுக ஆட்சி விரைவில் கலைக்கப்படும்: தமிழருவி மணியன்

The AIADMK regime will soon be dissolved
The AIADMK regime will soon be dissolved
Author
First Published Aug 23, 2017, 11:37 AM IST


ஆட்சித் திறனோ, ஆளுமைப் பண்போ, நேர்மை உணர்வோ எள்ளளவும் இல்லாத அதிமுக ஆட்சி கலைப்பு இன்னும் சிறிது நாளில், தமிழக மக்களுக்கு வாய்க்கப்போவதாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழருவி மணியன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மக்கள் நலன் சார்ந்த சிந்தனை சிறிதும் இல்லாமல், தங்கள் சொந்த நலன் சார்ந்து அரசுக்குப் புறம்பாக, மன சான்றின் உறுத்தலின்றி பொது வாழ்வைக் களங்கப்படுத்தத் தயங்காத மனிதர்கள் அதிகார பீடத்தில் அமர்ந்தால் எவ்வளவு அலங்கோலங்கள் அன்றாடம்
அரங்கேறக்கூடும் என்பதை இன்றைய சூழலில் தமிழகத்து மக்கள் நேரிடையாக அனுபவத்தில் உணர்ந்து விட்டனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சி, மூன்று துண்டுகளாக சிதைந்ததும், பதவிப் பங்கீட்டில் சமரசம் கண்டு, இரண்டு அணிகள் இணைந்ததும், தனிமைப்படுத்தப்பட்ட ஓர் அணி இன்று கலகக்கொடி பிடிப்பதும் மக்கள் நலனை முன்னிறுத்தி அல்ல என்பதை
நாடு நன்றாக அறியும்.

19 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து அதிகார நாற்காலியை விட்டு இறங்க வேண்டிய நிர்பந்தம் நேர்ந்து விட்டது.

ஆளுநர், உடனடியாக எடப்பாடி அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கட்டளை பிறப்பிப்பதை தவிர அவருக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.

ஆட்சி திறனோ, ஆளுமைப் பண்போ, நேர்மை உணர்வோ எள்ளளவும் இல்லாத இந்தக் கூட்டுக் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து என்று நமக்கு விடியல் வரும் என்று ஏங்கித் தவமிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த ஆட்சி கலைப்பு இன்னும் சிறிது நாளில் வரமாக
வாய்க்கப்போவதில், காந்திய மக்கள் இயக்கம், கடவுளுக்கு காலத்துக்கும் நன்றி செலுத்துகிறது.

இவ்வாற தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios