‘இந்திய தேசம் இந்துக்களின் தேசம்!’ இதுதான் இந்த நாட்டில் இயங்கும் இந்து அமைப்புக்களின் ஒரே  லட்சியம், ஒரே கனவு! எல்லாமே. இந்த அமைப்புக்களின் செல்வாக்கினை உள்வாங்கி, இவர்களின் மூலம் வாக்கு ஆதாயம் பெற்று இயங்கும் அரசியல் அமைப்புகள் என்னதான் தங்களை ‘பொது இயக்கம்’ போல் காட்டிக் கொள்ள முற்பட்டாலும் அந்த தாத்பர்யம் வெற்றி பெற்றதில்லை. 

பி.ஜே.பி.க்கு மட்டுமில்லை சிவசேனாவுக்கும் இந்த நிலைதான். அதேபோல் இந்த கட்சிகளின் தலைவர்களையும், அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைவராக அடிக்கோடிட்டுவிட முடியாது. காரணம் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் சித்தாந்தமே அவரது மூளை  முழுக்க வியாபித்திருக்கும் என்று கருதப்படுவதுதான். 

என்னதான் அத்வானி மிகப்பெரிய தலைவராக போற்றப்பட்டாலும் கூட அவர் மீது ‘இந்துத்வ’ சாயம் தூவப்படாமல் இருக்காது! சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும்  இந்திய பிரதமராக மோடி புகழப்பட்டாலும் கூட இந்தியாவின் சிறுபான்மையினர் அவரை மானசீகமாக விரும்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. இதேபோல் சிவசேனாவின் பால்தாக்கரே எதிர்கொண்ட விமர்சனங்களையும், உத்தவ் தாக்கரே வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் விமர்சனங்களும் அதிரிபுதிரி ரகங்கள்தான். 

ஆனால் பி.ஜே.பி.யின் ஒரு முகமாகவே வர்ணிக்கப்பட்ட அடல்பிகாரி வாஜ்பாயோ இந்த செண்டிமெண்டை அடித்து நொறுக்கினார். அவரது முகத்துக்காகவே சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்கு வங்கிகள் பி.ஜே.பி.யை ஆதரித்தன. ஆனானப்பட்ட கருணாநிதியையே தன் இலக்கியத்தால் உருக்கி, கூட்டணியில் சேர்த்துக் கொண்ட வாஜ்பாயினால் சிவிலியன்களை தன் கனிவால் ஈர்ப்பதில் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடவில்லை. தங்க நாற்கர சாலை உள்ளிட்ட அவரது தொலைநோக்கு திட்டங்கள், அடல்- ஐ ஆகப்பெரிய நிர்வாக ஆளுமையாய் காட்டின. 

பிரதமர் பதவியில் எல்லா மதத்தினரும் விரும்பும் நபராய் கோலோச்சிய வாஜ்பாயின் உடல் நிலை நலிந்த போது அத்வானிதான் அடுத்த ஐகான்! என்று பேசப்பட்ட நிலையை தகர்த்தெறிந்து பிரதமரானார் மோடி. இவர் அதிகாரம் பெற்ற பின் ஆக்டீவாக இருந்தாலும் அத்வானி அடக்கி வைக்கப்பட்டார், படுக்கையில் இருந்த வாஜ்பாயோ திரையிடப்பட்டார்! என்று ஒரு விமர்சனம் உண்டு. 

அது உண்மையா அல்லது பொய்யா? என்கிற வாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மோடியை பிரதமராக உயர்த்திவிட விழுந்த வாக்குகளில் மிக மிக கணிசமானவை கனிவு ததும்பிய வாஜ்பாய் மீதான அன்பினாலும், அவருக்கு செலுத்த வேண்டிய நன்றியினாலும் விழுந்தவையே! என்பதே பி.ஜே.பி.யின் பழைய சீனியர்களின் உறுதியான வாதம்!இது உண்மையா? என்பது இருவருக்கு மட்டுமே தெரியும். ஆம் இது வாஜ்பாயியின் ஆன்மாவுக்கும், மோடியின் மனசாட்சிக்கும் மட்டுமே தெரிந்த உண்மை!