உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விஜயகாந்த் ஆக்டிவ் பாலிடிக்சில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவரது மனைவி பிரேமலதா முழு நேர அரசியல்வாதியாகி செயல்பட்டு வருகிறார். தினந்தோறும் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, அறிக்கை தயார் செய்வது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது என பிரேமலதா புது ரூட்டில் பயணித்து வருகிறார். ஆனால் இந்த தகவல் தே.மு.தி.கவின் அடிமட்ட தொண்டர்களை தற்போது வரை ரீச் ஆகவில்லை.

தலைமையில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரிந்துள்ளது. எனவே கட்சி சார்பான பேனர்கள் மட்டும் இன்றி கோவில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பேனர்களில் தே.மு.தி.கவினர் வழக்கம் போல் விஜயகாந்த் புகைப்படத்தை மட்டுமே வைத்துவிடுகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் தற்போது வரை பிரேமலதா முழுமையாக ரீச் ஆகவில்லை.

இதனை தொடர்ந்து தே.மு.தி.கவினர் வைக்கும் அனைத்து பேனர்களிலும் நிச்சயமாக பிரேமலதா புகைப்படம் இடம்பெற வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு நிகராக பிரேமலதாவுக்கும் பேனர்கள், போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அண்ணியார் என்கிற பெயரை சுவர் விளம்பரம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தே.மு.தி.கவின் கட்சி அலுவலகங்களில் உடனடியாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா இணைந்து இருக்கும் போட்டோக்களை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.