மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. இதை கட்டியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக். அடுத்து வறட்சியின் பிடியில் இருந்த தென்மாவட்ட மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக முல்லைப் பெரியாறு அணை மாறியது. குறிப்பாக, தேனி மாவட்டம் செழித்தது. தங்களுக்கு உதவிய, பென்னிகுக்கை நினைவுகூரும் விதமாக, அவரது பிறந்தநாளான ஜனவரி 14-ம் தேதி ஆண்டுதோறும் பொங்கல் வைத்து இம்மாவட்ட விவசாயிகள் வழிபடுவது வழக்கம்.

வீட்டு விசேஷ அழைப்பிதழ்களில், பென்னிகுவிக்கின் படத்தை இடம்பெறச் செய்வதும், குழந்தைகளுக்கு பென்னி, பென்னிகுவிக், ஜான் பென்னி போன்ற பெயர்கள் வைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் தேனி மாவட்ட மக்கள். கிட்டத்தட்ட தங்களது வீட்டில் ஒருவராக, கடவுளாக கர்னல் ஜான் பென்னிகுக்கை கருதுகின்றனர். 

1913-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி லண்டனில் உள்ள தனது இல்லத்தில் மறைந்தார் பென்னிகுக். அவரது உடல், லண்டன் சர்ரே மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 100 வருடங்களைக் கடந்து, பராமரிக்கப்பட்டு வந்த பென்னிகுக்கின் கல்லறை, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி சேதமடைந்தது. இதை அறிந்த தேவாலய நிர்வாகம், லண்டன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தது. விசாரணையில், தொடர் மழை மற்றும் காற்று காரணமாகவே கல்லறை சேதமடைந்தது தெரியவந்தது. அதற்குள், கல்லறையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகத் தமிழகத்துக்கு தகவல் பரவியது. இதனால் தேனி மாவட்டத்தில், பதற்றமான சூழல் உருவானது. அரசியல் கட்சிகள், இது தொடர்பாகக் கண்டனம் தெரிவித்தன.

லண்டனில் வசிக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ‘’என்னுடைய வீட்டின் அருகேதான் பென்னிகுக் கல்லறை இருக்கும் தேவாலயம் உள்ளது. கல்லறை சேதமடைந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. நேரில் சென்று பார்த்தேன். அப்போது தேவாலய நிர்வாகத்திடம் நான் பேசினேன். மழை மற்றும் காற்றினால் சேதமடைந்ததாகவும், இது தொடர்பாக, பென்னிகுக்கின் உறவினர்களுக்கு தெரிவித்திருப்பதாகவும் தேவாலய நிர்வாகத்தினர் கூறினர். அதை அடுத்து சில தினங்களில் பென்னிக் குயிக் கல்லறையை சீர் செய்துவிட்டது தேவாலய நிர்வாகம். சீரமைக்க தேவையான தொகையை ஓ.பி.ரவீந்திரநாத் அனுப்பி வைத்தார். அதைத் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து தேவாலயத்தை சீரமைக்கவும் ஒரு பெரும் தொகையை ஓ.பி.ரவீந்திரநாத் அனுப்பி வைத்ததாக கூறி அந்த தேவாலய நிர்வாகம் ஓ.பி.ஆருக்கு நன்றி தெரிவித்துள்ளது. அதில், ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு நாங்கள்  பெரிய நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். இந்திய துணைக் கண்டத்துடனும், குறிப்பாக தெற்கிலும் கர்னல் பென்னிகுயிக் மூலம் உள்ள எங்கள் தொடர்புகளை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தேவாலயம் பணப்பிரச்னையில் இருந்தது. இதனால் பராமரிக்க இயலாமல் இருந்தோம். ரவீந்திரநாத் மிகவும் தாராளமான நன்கொடை அளித்துள்ளார்.

இந்த நேரத்தில் ஒரு பெரிய நன்றியை மைக்கேல் தேவாலயத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நன்கொடையை வைத்து அதிகமாக பணிகளை செய்ய முடியும். எங்கள் தேவாலயத்தில் இருக்கும் அனைவரின் சார்பாக ரவீந்திரநாத்துக்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.