பன்னீர்செல்வத்தின் பேச்சை கேட்டு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என டிடிவி ஆதரவாளரான எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். 

ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து முதலமைச்சரான பன்னீர் செல்வத்தை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா வற்புறுத்தி பதவி விலக கூறியதாக குற்றசாட்டை முன்வைத்தார் ஒபிஎஸ்.

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா. இதையடுத்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். துணைப்பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி அரசுக்கு இழுக்கு ஏற்படுத்த முயலவே அவரை ஒதுக்கினார் எடப்பாடி.

பன்னீருடன் கூட்டணி வைக்க எடப்பாடி பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டார். ஆனால் ஜெ மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் எனவும் சசிகலா குடும்பத்தை ஒதுக்க வேண்டும் எனவும் எனவும் ஒபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து முதலாவதாக ஜெ மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் என எடப்பாடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், செய்தியாளருக்கு பேட்டியளித்த டிடிவி ஆதரவாளரான எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் பன்னீர்செல்வத்தின் பேச்சை கேட்டு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என தெரிவித்தார். 

மேலும் இரு அணிகளும் இணையாது எனவும், விசாரணை கமிஷன் அமைத்தால் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை எனவும் தெரிவித்தார். 

விசாரணை கமிஷனில் பிரதமர், ஆளுநர், பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் ஆஜராக  வேண்டும் என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.