thangathamilselvam says that they wont accept ops demands
அதிமுகவில் பிரிந்து இருக்கும் இரு அணிகளும் இணைவது குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தை விரைவில் நடக்கும், அதற்கான சுமுக சூழ்நிலை உருவாகியுள்ளது என இரு தரப்பில் உள்ள நிர்வாகிகளும் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன், இரு அணிகளும் இணைவதில், ஓ.பன்னீர்செல்வத்தின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் அணியினர், மீண்டும் எங்களுடன் இணைவதற்கு முரண்பாடான நிபந்தனைகளை விதிக்கின்றனர். முறையான பேச்சு வார்த்தைக்கு வராமல் முரண்பாடான ஒதுங்கிவிட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்களுடன் இணைந்தாலும், ஒதுங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடன் இணைவதற்கு முன்னதாகவே, அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை முன் வைக்கின்றனர். அதனை நாங்கள் ஏற்க முடியாது.
எங்களது ஒரே குறிக்கோல் கட்சியை காப்பாற்றுவது, ஆட்சியை தக்க வைப்பது, எங்களது சின்னமான இரட்டை இலையை மீட்பது மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் இரு அணிகள் இணைவது குறித்து நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான காலம் கனிந்துவிட்டது என சி.வி.சண்முகம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
