தர்மத்துக்கும் ஓ.பி.எஸ்.-க்கும் சம்பந்தம் இல்லை என்றும், ஓ.பி.எஸ்.க்கு தர்மத்தைப் பற்றி பேச அருகதையில்லை என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தேனி மாவட்டத்தில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் ஆதரவாளரான ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தினால்தான், யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். இது எங்களுக்கு சாதகமானதுதான்.

தர்மத்துக்கும் ஓ.பி.எஸ்.க்கும் சம்பந்தம் இல்லை. ஓ.பி.எஸ்க்கு தர்மத்தை பற்றி பேச அருகதையில்லை. சின்னம்மா சசிகலா குடும்பம் இல்லை என்றால் ஓ.பி.எஸ். இல்லை. அதை மறந்து பேசி வருகிறார்.

ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணையின்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த வீடியோ சமர்ப்பிக்கப்படும். அதன் மூலம் நாங்கள் 100 சதவீதம் நல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள்.

இவ்வாறு தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.