என்னைப் பற்றி பேச ஆரம்பித்தால், நான் பல விஷயங்களைப் பேசுவேன் என்று தங்கதமிழ்ச்செல்வன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல்  தோல்விக்கு பிறகு அமமுகவில் தினகரனுக்கும் தங்கதமிழ்ச்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது.  இந்நிலையில் டிடிவி தினகரன் பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசும் ஆடியோ வெளியாகி சமூக ஊடங்களில் வைரலானது. அதில் ஆபாசமாகப் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், ‘நான் விஸ்வரூபம் எடுத்தால், எல்லோரும் அழிந்துபோய்விடுவீர்கள்” என்று டிடிவி தினகரனை விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேனி மாவட்ட அமமுகவினருடன் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தங்கதமிழ்ச்செல்வனை விமர்சித்து பேசினார். “தங்கத்தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுக்கமாட்டார். பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். அமமுகவில் அவருடைய இடத்துக்கு வேறு ஆட்களை நியமிக்கப்போகிறோம்” என்று  தெரிவித்தார். தங்கதமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து அடிப்படை தொண்டர் உள்பட எல்லா பொறுப்புகளிலும் விலக்கிவைக்க உள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “எல்லாம் என்றால், எல்லாமும்தான்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.  
இந்நிலையில் டிடிவி தினகரனின் விமர்சனத்துக்கு தங்கதமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார். “டிடிவி தினகரன் தவறாகப் பேசுகிறார். இப்படி பேசுவது நல்ல தலைமைக்கு அழகல்ல. நான் அமைதியாகவே இருக்கவிரும்புகிறேன். என்னைப் பற்றி பேச ஆரம்பித்தால், நானும் பல விஷயங்களைப் பற்றி பேசுவேன்.  என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை.  நான் வளர்ந்து வருவதால், என் மீது டிடிவி தினகரனுக்கு பொறாமை ஏற்பட்டிருக்கலாம்” என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.