அதிமுக உடைந்தது முதல்  டி.டி.வி.தினகரன் அமமுக தொடங்யது வரை அவருக்கு பெரும் பக்க பலமாக இருந்தது தேனி தங்க தமிழ் செல்வன்தான். மற்றவர்களைவிட தினகரனுக்கும், சசிகலாவுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் அனு அளித்தால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக சார்பில் தங்கதமிழ் செல்வன் போட்டியிட்டார்.

ஆனால் மக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அமமுக பெரும் தோல்வி அடைந்தது. அப்போதிருந்தே டி.டி.வி.தினகரனுக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.

டி.டி.வி.தினகரன் குறித்து தங்கம் சற்று மோசமாகப் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தங்க தமிழ் செல்வனை அமமுகவில் இருந்து தினகரன் நீக்கினார். இதையடுத்து சிலர்  தங்க தமிழ் செல்வன் அதிமுகவில் இணையப் போவதாகவும், ஒரு சிலர் திமுகவில் இணையப் போவதாகவும் தகவல்  தெரிவித்தனர்.ஆனால் தான் கொஞ்சநாள் அமைதியாக இருக்கப் போவதாக தங்கத் தமிழ் செல்வன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் முறைப்படி திமுகவில் அவர் இணையப் போவதாக  தகவல்  வெளியாகியுள்ளது.

இதற்காக தேனியில் இருந்து ஏராளமான பஸ்களில் தங்கத் தமிழ் செல்வன் ஆதரவாளர்கள் சென்னை நோக்கி  படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.