thangamani trying to convincing senthil balaji

ஜெயலலிதா முதல்வராக இருந்த இடத்தில், யார் முதல்வராக வந்தாலும், அமைச்சர்களையும், எம்.எல்.ஏ க்களையும் கட்டுப்படுத்த முடியாது என்று எடப்பாடி தெளிவாக உணர்ந்து விட்டார்.

இருந்தாலும், நம்பி ஒப்படைத்த முதல்வர் பொறுப்பை, திறம்பட வகிக்க முடியவில்லை என்றாலும், குறைவில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் போராடுகிறார்.

ஆனாலும், எம்.எல்.ஏ க்களும், அமைச்சர்களும் அவருக்கு தொடர்ந்து கொடுத்து வரும் நெருக்கடிகள், அவரை நிம்மதி இழக்க செய்த்துள்ளது.

அமைச்சர் பதவி கேட்டு குடைச்சல் கொடுத்து வரும் ஒவ்வொருவரும், தமக்கு 10 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருக்கிறது, 20 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருக்கிறது என்று அவ்வப்போது, முதல்வரை டென்ஷனாக்கி வருகின்றனர்.

தலித் எம்.எல்.ஏ க்கள் தனிக்கொடி பிடித்து, அமைச்சரவையில் முக்கியத்துவம் கேட்டு கொடுத்த நெருக்கடியை சமாளிக்கவே, எடப்பாடிக்கு உன்னை பிடி, என்னை பிடி என்று ஆகிவிட்டது.

இந்நிலையில், தோப்பு வெங்கடாச்சலமும், கரூர் செந்தில் பாலாஜியும், சில எம்.எல்.ஏ க்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டு, சட்டமன்ற அறையில் நடத்திய கூட்டம், முதல்வரை படு டென்ஷன் ஆக்கியுள்ளது.

இதையடுத்து, அமைச்சர் தங்கமணியை அழைத்த முதல்வர், செந்தில் பாலாஜியை சமாதானம் செய்ய சொல்லி இருக்கிறார். அவரும், செந்தில் பாலாஜியுடம் பேசி அவரை சமரசம் செய்ய முயன்றுள்ளார்.

கொஞ்சம் அமைதியாக இருங்கள், உங்கள் அனைவருக்கும் நல்லது நடக்கும் என்று செந்தில் பாலாஜியிடம் கூறி இருக்கிறார் தங்கமணி. ஆனால், நல்லது நடப்பது இருக்கட்டும், அது எப்போது நடக்கும் என்பதை உறுதியாக சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டுள்ளார் செந்தில் பாலாஜி.

சரி, நான் முதல்வரிடம் கேட்டு அதன் பிறகு பேசுகிறேன் என்று ஜகா வாங்கி இருக்கிறார் தங்கமணி. அவரது சமாதானத்தை செந்தில் பாலாஜி ஏற்கவில்லை என்றே கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் தேர்தல் முடியும் வரை அமைச்சரவையில் மாற்றம் இல்லை என்று முதல்வர் ஏற்கனவே கூறி விட்டார். குடியரசு தலைவர் தேர்தலுக்கு பின்னர், நிலைமை எப்படி எல்லாம் மாறும்? என்று யாருக்கும் தெரியாது.

அதனால், குரூப், குரூப்பாக முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பதும், முதல்வர் அவர்களை சமாதானம் செய்வதும்தான், எடப்பாடி அரசில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர்.

ஆனாலும் கொங்கு சமூகத்தை சேர்ந்தவர்களே நெருக்கடி கொடுப்பதுதான், முதல்வருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது