தமிழக அமைச்சர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பேசிபேசியே கட்சியின் கெளரவத்தை கபளீகரம் செய்யும் டீம், மற்றொன்றோ பேசவே பேசாமலிருந்து செயல்களின் மூலம் இந்த ஆட்சியை வலுவாக நடக்க வைக்கும் டீம். இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர் மின்சார வாரிய அமைச்சர் தங்கமணி. 

முதல்வரின் இரு கரங்களாய் பார்க்கப்படும் கொங்கு மண்டல அமைச்சர்கள் இருவரில் தங்கமணி ஒருவர். சிம்பிளாய் சொல்வதென்றால் இ.பி.எஸ்.ஸின் கை  இவர். எப்பவாச்சும் பேசினாலும் கூட ஓவர் ஆர்பாட்டமில்லாமல் பேசுபவர். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் செந்தில்பாலாஜியை வெளுத்தெடுக்கிறார் மனிதர். 
அதில் சில ஹைலைட் பாயிண்டுகள்....

*    கடந்த முறை இதே தொகுதியில் செந்தில்பாலாஜிக்கு ஓட்டு கேட்டதை நினைத்து இப்போது வருந்துகிறேன். கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு ஓடியவருக்கு ஓட்டு கேட்டுவிட்டோமே, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் அரசியல் வியாபாரிக்கு ஓட்டு கேட்டுவிட்டோமே என்று மனசு வலிக்கிறது. 

*    அம்மாவால் அரசியலுக்கு வந்து, அம்மாவால் எம்.எல்.ஏ.வாகி, அம்மாவால் அமைச்சருமான செந்தில்பாலாஜி, அம்மா மறைவுக்கு பின் அந்த நன்றியை மறந்து, அம்மாவின் எதிரியான கருணாநிதி குடும்பத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறார். 

*    பச்சைத் துரோகி செந்தில்பாலாஜி,  அம்மா மருத்துவமனையில் இருந்தபோது செந்தில்பாலாஜிக்கு சீட் கொடுக்க கூடாது என்று எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்தவர் முதல்வர் எடப்பாடியார். ஆனால் அந்த நன்றியை மறந்து ‘எடப்பாடியாரை முதல்வராக்கியது நான் தான்.’ என்று விசுவாசமில்லாத இந்த அரசியல்வியாபாரி பேசுகிறார். 

*    தான் அமைச்சராக இருந்தபோது அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா கேட்டு மனு கொடுத்தவர்களுக்கே அதை கொடுக்காதவர், இன்று எப்படி தனிப்பட்ட முறையில் 25ஆயிரம் பேருக்கு நிலம் கொடுக்க முடியும்? தோல்வி பயத்தால் பொய் வாக்குறுதிகளை அள்ளிவிடும் செந்தில்பாலாஜியை அரவக்குறிச்சி மக்கள் அப்புறப்படுத்துவார்கள். ...என்று பொங்கியிருப்பவர், ஸ்டாலினையும் போகிற போக்கில் ”முதல்வர் பதவி மீதான வெறி ஸ்டாலினை பாடாய்ப் படுத்துகிறது. அதனால்தான் ‘மே 23-க்கு பின் ஆட்சி மாறும்’ என்று நடக்கவே நடக்காத விஷயத்தை, பகல் கனவில் உளறி கொட்டுகிறார்.” என்று தாளித்திருக்கிறார். 

சாதுவான தங்கமணி இப்படி மிரள்வது ஏன்? என்பதே அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.  என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது