முதலமைச்சர் துபாய் பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் துபாய் பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா போல் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். தற்போது அவரது விமர்சனத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், முதலீடுகளை ஈர்க்க மட்டுமின்றி தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்காகவே முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், விமான வசதி கிடைக்காததால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதற்கான செலவையும் திமுகதான் ஏற்கிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மேலும் உலக கண்காட்சி நிறைவுபெற சிறிது நாட்கள் இருக்கும் போது கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சட்டம்- ஒழுங்கு எப்படி இருந்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார். முன்னதாக, சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் பணிகளை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா போல் இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக புதிய தொழில் தொடங்க துபாய் சென்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர்.
துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சுற்றுலாவா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு சென்றதை அப்போது மு.க.ஸ்டாலின் விமர்சித்தார் என்று தெரிவித்தார். மேலும் விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சரிவர நடைபெறவில்லை எனில் சிபிஐ விசாரணை கோருவோம் என்றும் கூறினார். அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். சசிகலா பற்றிய ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து தனிப்பட்டது என்றும், தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறிய இபிஎஸ், சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப்பிரச்னையில்தான் வேறுபாடு உள்ளது என்றும் கூறினார்.
