அடுத்த முதலமைச்சர் தினகரன் தான்…பற்ற வைத்த அதிமுக எம்எல்ஏ..

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விரைவில் தினகரன் தேர்ந்தெடுக்கப்படுவார் என நிலக்கோட்டை அதிமுக எம்எல்ஏ தங்கதுரை கொளுத்திப் போட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைந்ததையடுத்து ஓபிஎஸ் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ்ன் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக பொது மக்கள் பாராட்டினர்.

வர்தா புயல், கிருஷ்ணா நீர், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளில் ஓபிஎஸ் நல்ல பெயர் எடுத்திருந்தார்.நல்லா போயிட்ருந்த ஆட்சில முதல்ல கை வச்சது அமைச்சர் உதயகுமார்தான். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதலமைச்சராக வேண்டும் அப்படின்னு கொளுத்திப் போட்டார்.

பின்னர் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கட்சியின் பொதுச் செயலாளர்தான் முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என அடுத்து கொளுத்திப் போட்டார்.

இந்நிலையில் அடுத்த முதலமைச்சர் தினகரன் தான் என்றும் அவர் விரைவில் பதவி ஏற்பார் என்றும் நிலக்கோட்டை அதிமுக எம்எல்ஏ தங்கதுரை கொளுத்திப் போட்டுள்ளார்.


சசிகலா ஆதரவாளரான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ தங்கதுரை.,பொது மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகம் வந்தார்.

அப்போது பேசிய தங்கதுரை ,தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்ட பின் தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் . ஜெயலலிதா இருந்த போதே, தினகரன் கட்சிப் பணி ஆற்றினார்…அவர் கட்சிக்கு நல்லதே செய்வார். அவர் முதலமைச்சர் ஆகும் காலம், விரைவில் வரும் என்றும் தங்கதுரை கூறினார்.

ஏற்கனவே ஓபிஎஸ் குறித்து இது போன்று பேசி அவர் அதிகாரத்தில இருந்து துரத்தப்பட்டார். தற்போது தங்கதுரை கொளுத்திப்போட்ட இந்த பிரச்சனை எடப்பாடி பழனிசாமியின் பதவியை காவு வாங்குமா?