thanga thamizhselvan speech in front of supporters

இன்னும் 10 நாளில் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் எனவும் அதன்பிறகு அதிமுக தங்கள் வசம் வரும் எனவும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினகரனையும் சசிகலாவையும் ஓரங்கட்டிவிட்டு பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி வருகின்றனர்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றும் நோக்கில் தினகரன் அணியினர் செயல்பட்டு வருகின்றனர். கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கேட்ட சின்னமும் கிடைக்காமல், தனித்து விடப்பட்ட தினகரன், ஆர்.கே.நகரில் அபார வெற்றி பெற்றார்.

அதற்குப் பிறகு தினகரனின் ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து ஆட்சியாளர்கள் நீக்கி வருகின்றனர். தினகரனின் ஆதரவாளர்களை மாவட்ட வாரியாக களையெடுக்கும் பணியை பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும், விரைவில் கட்சி நமது கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கையுடன் தினகரன் அணி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், தேனியில் ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தினார். 

அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன், பேருந்து கட்டண உயர்வு கண்டனத்துக்குரியது. நிர்வாகம் செய்ய தெரியாமல், மக்களை சிரமத்திற்கு ஆளாக்கும் வகையில் பேருந்து கட்டணத்தை ஆட்சியாளர்கள் உயர்த்தியுள்ளனர். நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்பதால்தான், ஆளுநரிடம் 18 எம்.எல்.ஏக்களும் கடிதம் கொடுத்தோம். ஆனால் அதற்காக தகுதிநீக்கம் செய்துவிட்டனர்.

இன்னும் 10 நாட்களில் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்துவிடும். தகுதிநீக்கம் செல்லாது என்றுதான் தீர்ப்புவரும். அதன்பிறகு நாங்கள் 18 பேரும் தினகரனுடன் சேர்ந்து சட்டமன்றத்துக்கு செல்வோம். தீர்ப்பு மட்டும் வரட்டும். அதிமுகவும் இரட்டை இலையும் நமக்குத்தான் என தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.