thanga thamizhselvan opinion about upcoming verdict on mlas disqualification case

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால், உடனடியாக சட்டமன்றத்திற்கு சென்று கூட்டத்தில் கலந்துகொள்வோம் என தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரும் தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக, தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தகுதிநீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு பிற்பகல் ஒரு மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரும் தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால் மேல்முறையீடு செய்ய மாட்டேன். இது என்னுடைய நிலைப்பாடு. ஆனால் இடைத்தேர்தல் வந்தால், நாங்கள் 18 பேரும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெறுவோம். 

எங்களது பிரதான நோக்கம், சட்டமன்றத்தில் உட்கார்ந்து ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்பதே. தீர்ப்பு மட்டும் எங்களுக்கு சாதகமாக வந்தால், உடனடியாக சட்டமன்றத்திற்கு சென்று கூட்டத்தில் கலந்துகொள்வோம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.