இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கும், அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கும், ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது. அப்போது சசிகலா தன்னை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார் பன்னீர்செல்வம். 

ஆனால் முதலமைச்சராக போகிறோம் என கனவு கண்ட சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதன்மை வேட்பாளராகவும், டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் அமைத்து விட்டு சென்றார். 

இதைதொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஆர்கேநகர் தேர்தலில் எடப்பாடி தரப்பில் டிடிவி தினகரனும், பன்னீர் தரப்பில் மதுசூதனும் வேட்பாளராக களமிறங்கினர். 

ஆனால் அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன், இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கும், அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கும், ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். 

மேலூரை விட பலமடங்கு பிரம்மாண்டமாக தேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.