தங்க தமிழ்ச்செல்வனை தூண்டில் போட்டு திமுகவுக்குக் கொண்டு வந்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதை, ‘தளபதியின் பெருந்தன்மை’ எனச் சொல்லி உச்சிக் குளிர்ந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் கடந்த மாதம் இணைந்தார். மேலும் தேனியில் பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் விழாவும் பொதுக்கூட்டமும் தேனி வீரபாண்டியில் நேற்று நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிய ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வனை நீண்ட நேரம் பாராட்டி பேசினார். குறிப்பாக தங்க தமிழ்ச்செல்வனை தூண்டில் போட்டு திமுகவுக்குக் கொண்டு வந்ததாக ரகசியத்தையும் பகிர்ந்தார்.


இந்நிலையில் ‘தங்க தமிழ்ச் செல்வனை தூண்டில் போட்டு திமுகவுக்குக் கொண்டு வந்ததாக’ மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டத்தைக் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், “ஒரு கட்சியின் தலைவர் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசியிருப்பது தளபதி மு.க. ஸ்டாலினின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அண்ணா உருவாக்கிய திமுகவைக் கட்டி காத்தவர் கருணாநிதி. அவர் வழிவந்த மு.க. ஸ்டாலின், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு’ என்று அண்ணா கூறிய கூற்றை நிரூபித்து காட்டியிருக்கிறார்.


வேறு கட்சியில் இருந்தாலும், நன்றாக செயல்படுபவர்கள் எங்களிடம் வாருங்கள், நாம் எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம் என்று ஒரு கட்சித் தலைவர் கூறுவதில் தவறு என்ன இருக்கிறது? அதைத்தான் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.” என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.