நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு பலரும் சென்றவண்ணம் உள்ளனர். அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் அதிமுகவுக்கு செல்ல இருப்பதாக செய்திகள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றன. இந்நிலையில் “தமிழகத்தில் பிளாஸ்டிக்கை ஒழித்த அண்ணன் எடப்பாடிக்கு பாராட்டுகள்” என்று தங்கதமிழ்செல்வன் பேசியது அமமுகவில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து அமமுகவின் கர்நாடக பிரிவு செயலாளர் புகழேந்தி கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என தங்கதமிழ்செல்வன் சொன்னால், அப்போ டிடிவி.தினகரன் யார்? இதுபோன்ற பேச்சுக்கள் சரியா என்பதை தங்கதமிழ்செல்வன் யோசித்து பார்க்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழக அரசு சாதனை செய்ததாக  கூறுகிறார் தங்கதமிழ்செல்வன். அவருடைய சொந்த ஊரிலே பிளாஸ்டிக் உள்ளதே. தமிழக அரசோ, அந்த அரசை சார்ந்துள்ள அமைச்சர்களோ பிளாஸ்டிக் ஒழிப்பில் சாதனை செய்துள்ளதாக சொல்லவில்லை. ஆனால்,  தங்கதமிழ்செல்வன்  சொல்லவேண்டிய அவசியம் ஏன் வந்தது?


அதிமுக அரசு எந்த சாதனையையும்  செய்யவில்லை என்பதே உண்மை. அதை மாற்றி ஏன் இந்தப் புகழாரம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது புரியாத புதிராக உள்ளது. அமமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியைச் சாதகமாகப் பயன்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்துவருகிறார்கள். தேர்தலில் எங்களுடைய சின்னம் சரியில்லை என்று தங்கதமிழ்செல்வன் கூறிய கருத்தை நானும் வரவேற்கிறேன். இதுபோன்ற கருத்துகளை தலைமையிடம்தான் தெரிவிக்க வேண்டும். 
தங்க தமிழ்செல்வனின் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. என்னுடைய நண்பர் என்ற முறையில் அவர் கூறியது வேதனையாக உள்ளது. அதிமுகவுடன் இணைவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதிமுகவுடன் சமரசம் செய்யும் திட்டமே எங்களுக்கு இல்லை.” என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.