சந்திராயன் ராக்கெட் மாதிரி ஜிகுஜிகுவென பாய்ந்த தினகரன் திடீரென தீபாவளி ராக்கெட் மாதிரி மருந்து தீய்ந்து தரை இறங்கிக் கொண்டிருக்கிறார். பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட விவகாரம் அவரது அரசியல் கெத்தை கன்னாபின்னாவென காலி செய்துவிட்டது. இது மட்டுமில்லாமல் உட்கட்சி விவகாரம்தான் அவரை ஓவராய்  கடுப்பேற்றி இருக்கிறது! என்கிறார்கள்.  

அதென்ன உட்கட்சி பிரச்னை?....

தங்க தமிழ் செல்வனுக்கும், தினகரனுக்கும் கடந்த சில நாட்களாய் முட்டல் உச்சம் தொட்டுவிட்டதாம். துவக்கத்திலிருந்தே இருவருக்குள்ளும் பெரிய புரிதல் இல்லை. சசிகலா சொன்ன வார்த்தைக்காக தினகரனுடன் வேண்டா வெறுப்பாக குப்பை கொட்ட துவங்கிய தமிழ்செல்வன், இந்த தீர்ப்புக்கு பிறகு வெளிப்படையாகவே தினாவை புரட்டி எடுக்க துவங்கிவிட்டாராம் கட்சிக்குள். ‘இவரை நம்பினால் விளங்கவே மாட்டோம்.’என்று புலம்பியிருக்கிறார். மற்றவர்களுக்கும் பீதியை கிளப்பியிருக்கிறார்.  

’மேல்முறையீடு செய்யவா அல்லது நாசமாக போவதா?’ என்று மீடியாவிடம் அவர் பேசியபோதே தினகரனுடன் அவருக்குள்ள முரண்பாடு பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. தீர்ப்பு தந்த அடி, ஆட்களை இழுக்க துவங்கியிருக்கும் எடப்பாடியார் என்று எல்லா திசைகளிலும் இருந்து தினகரனை பிரச்னைகள் அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி தங்க தமிழும் தன் பங்குக்கு சிக்கல் கொடுப்பது அக்கட்சி முக்கியஸ்தர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. 

இதனால் தினகரனின் வலது கரமான வெற்றிவேல் ‘உனக்கு இன்னாபா பிரச்னை? தலீவர்ட்ட சொல்லி நான் சரி பண்றேன்.’என்று தங்கத்திடம் கடுப்பேறிப்போயி கேட்டிருக்கிறார். அதற்கு பெரிய லிஸ்டே போட்டு தினகரனை குற்றம் சொல்லியிருக்கிறார் தமிழ். அதில் ஹைலைட்டாக சில புகார்கள்... “கிட்டத்தட்ட இன்னைக்கு அரசியல் அநாதைகளாக நாம இருக்கோம்! இதுக்கு நம்முடையை தப்பான அரசியல் நடவடிக்கைகள்தான் காரணம். இதை அவரு (தினகரன்) புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறார். 

பதினெட்டு பேரும் கவர்னட்டர் புகார் கொடுத்தது எனக்கு சுத்தமா பிடிக்கலை. வேண்டாம்!ன்னு சொன்னேன் ஆனா அவர் கேட்கலை. சின்னம்மாவுக்காக தினகரனை அணுசரிச்ச நான், வேற வழியில்லாம ராஜ் பவனுக்கு போனேன். ஆனா அந்த செயலோட விளைவு இன்னைக்கு நம்ம பதவிகளை காவு வாங்கிடுச்சு. தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய வேண்டாம்! அப்படின்னு துவக்கத்துல இருந்தே சொல்லிட்டு இருந்தேன். ஆனா அவருதான் அதை ஏத்துக்காம இருந்தார். ஆனா மதுரையில நடந்த ஆலோசனை கூட்டத்துல என் மூலமாவே ‘மேல் முறையீடு செய்வோம்’ன்னு அறிவிக்க வெச்சார். 

ஆனா அடுத்த சில நாட்கள்ள அதே மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ’மேல்முறையீடு செய்யப்போறதில்லை’ன்னு இவரே அறிவிக்கிறார். அப்போ முதல்லேயே தெளிவான முடிவை எடுத்த என்னை டம்மி பண்ணிட்டு, இவரு பெரிய சாணக்கியர் மாதிரி காட்டிக்கிறார். என்னை எதுக்கெடுத்தாலும் மாற்றி மாற்றி பேசவெச்சுட்டு கடைசியில அவரு ஸ்கோர் பண்றார். 

செந்தில்பாலாஜியையும், பழனியப்பனையும், உங்களையும்தான் தலையில தூக்கி வெச்சு ஆடுறார், என்னை ஏதோ லூசு மாதிரி நினைக்கிறார். இவ்வளவு நடந்தும் நான் அவர் கூட இன்னும் இருக்குறதே பெருசு! அதைப் புரிஞ்சுக்க சொல்லுங்க.” என்றாராம். ரைட்டு! பஞ்சாயத்து சைத்தான் சைக்கிளேற ஆரம்பிச்சிடுச்சு! என்று புலம்ப துவங்கிவிட்டனர் அ.ம.மு.க.வினர்.