தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களால், தொழில்துறையில் முதலீடு குறையும் என்ற தமிழிசையின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் ஆகியவை தேசிய அளவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக், உலகளவில் டிரெண்டானது.

இந்நிலையில், சட்டமேதை அம்பேத்கரின் பிறந்ததினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களால் தொழில் முதலீடுகள் குறையும். போராட்டங்களால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அச்சம் கொள்வார்கள் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து அம்சங்களும் இருப்பதால், தொழில்துறை முதலீடுகளில் எந்த பாதிப்பும் இருக்காது என ஜெயக்குமார் பதிலளித்தார்.