ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று கடந்த ஆண்டு துவக்கத்திலேயே அடித்து கூறியவர் தமிழ் அருவி மணியன். மேலும் ரஜினி ரசிகர்களை சந்திப்பார், கருத்து கேட்பார், அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பார் என்று ஒவ்வொன்றையும் சரியாக கணித்து தமிழருவி மணியன் கூறிக் கொண்டே வந்தார். அவ்வப்போது சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்து பேசுவதையும் தமிழருவி வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு திருச்சியில் ரஜினியை அரசியலுக்கு வரவேற்பதாக கூறி பிரமாண்ட மாநாடு ஒன்றும் தமிழருவி மணியனால் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். இதன் பிறகு ரஜினிக்கும் – தமிழருவிக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. தமிழருவி ஆலோசனையை ரஜினி கேட்பதாக கூறப்பட்டது. அரசியலில் தமிழருவியை வைத்து ரஜினி ஆழம் பார்ப்பதாகவும் பேசப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினி – தமிழருவி மணியன் சந்திப்பு நிகழவில்லை. இதற்கு காரணம் ரஜினி அரசியல் கட்சியை ஆரம்பிப்பதை தாமதம் செய்வது தான் என்று கூறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலிலேயே போட்டியிட வேண்டும் என்று ரஜினிக்கு தமிழருவி ஆலோசனை வழங்கியதாகவும், ஆனால் ரஜினி சட்டமன்ற தேர்தல் தான் சரியாக இருக்கும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக சந்திப்பு நிகழாத நிலையில் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்று ரஜினி கேட்டது பத்து அரசியல் கட்சிகள் சேர்ந்து மோடியை எதிர்ப்பதால் மோடி தான் பலசாலி என்கிற ரீதியில் ரஜினி பேசியது தமிழருவிக்கு ஏற்புடையதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் மோடிக்கு மக்கள் மத்தியில் தற்போதைய சூழலில் பெரிய அளவில் அபிமானம் இல்லாத நிலையில் ரஜினி ஏன் மோடிக்கு கொடி பிடிக்க வேண்டும் என்று தமிழருவி கருதுவதாகவும், இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தமிழருவி பேசியதாகவும் சொல்லப்படுகிறது.