டெல்லியில் தமிழச்சி செய்த அரசியல் தமிழகத்தில் பேசப்பட்ட நிலையில் சென்னையில் வந்து கனிமொழியை சமாதானம் செய்யும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

முதல்முறையாக எம்.பி.யாகியுள்ள தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் பேசிய கன்னிப்பேச்சு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் அவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கேட்ட கேள்விகள் சரவெடி ரகத்தில் இருந்தது. மேலும் தமிழகத்தின் சமூக நீதி விவகாரம் தொடர்பாகவும் சுருக்கமாக தமிழச்சி பேசிய பேச்சுகள் அடடே ரகம் தான். 

இதனை தொடர்ந்து எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்கிற மத்திய அரசின் புதிய முடிவுக்கு எதிராக டெல்லியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழச்சி எழுப்பிய முழக்கங்களும் பேசப்பட்டன. இப்படி யாரும் எதிர்பாராத வகையில் தமிழச்சி டெல்லியில் திமுகவின் முகமாக இரண்டே நாளில் மாறிவிட்டார். இது கனிமொழிக்கு தான் பின்னடைவாக இருந்தது. 

ஆனாலும், கூட கனிமொழியுடன் மோதல் போக்கோ அல்லது கனிமொழியை அதிருப்தி அடையவோ வைக்ககூடாது என்பதில் தமிழச்சி உறுதியாக உள்ளார் போல. அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னிடம் வந்து மைக்கை நீட்டிய ஏஎன்ஐ செய்தியாளரிடம் கனிமொழியிடம் செல்லுமாறு கைகாட்டினார் தமிழச்சி. இதேபோல் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்த கருத்தரங்கிலும் தமிழச்சி மற்றும் கனிமொழி கலந்து கொண்டு பேசினர். வழக்கம் போல் தமிழச்சி பேசியதற்கு தான் அங்கு அப்ளாஸ் அள்ளியது. அதே போல் ஊடகங்களும் கூட தமிழச்சியை தான் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின. கனிமொழியை கண்டுகொள்ளவில்லை. ஆனால் நிகழ்ச்சியில் பேசிய தமிழச்சி, வார்த்தைக்கு வார்த்தை கனிமொழியை புகழ தவறவில்லை. ஏதோ பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவே கனிமொழி கொண்டு வந்தது போல் அவர் பேசிக் கொண்டிருந்தார். 

இதற்கெல்லாம் காரணம் டெல்லியில் தான் செய்த அரசியல் தமிழகத்தில் நல்ல பலனை கொடுத்துள்ள நிலையில் அதனால் கனிமொழி அதிருப்தி அடைந்துவிடக்கூடாது என்பதற்கு தானாம்.