அதிமுக  - பாஜக கூட்டணி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி கையெழுத்தானவுடனேயே, இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகிய மூவரும் கடுமையாக எதிர்த்தனர்.

இதையடுத்து இவர்கள் மூவரும் தங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி  மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில்  சென்னையில் நடைபெற்றது. அப்போது பாஜக இருக்கும் அணியை ஆதரிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி , இந்திய திருநாட்டை பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டிய கட்டாயத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்கிறது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால், ஜனநாயகம், நீதிமன்றம், அரசியல் சட்ட அமைப்பு, சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநிலங்களின் உரிமைகள், கல்வி அமைப்புகள், ஆகியவை முற்றிலுமாக சீர்குலைக்கப்படும் அபாயம் இருக்கிறது என கூறினார்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழக நலன்களுக்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் பாஜகவின் வளர்ச்சி என்பது தமிழகத்திற்கும், திராவிட - தமிழ் தேசிய அரசியலுக்கும் பேராபத்தை விளைவிக்கும்  என்றார்.

நாடெங்கிலும் பாஜக எதிர்ப்பலை வீசுவதையும், அதற்கு மாற்றாக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற- சமூகநீதி கட்சிகள் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருவதையும் உணர முடிகிறது. அந்த வகையில் பாஜக அணியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதை மஜக விரும்பவில்லை. எனவே, நாட்டின் நலன் கருதி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஜக போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது.

அதே நேரத்தில்  நாட்டின் எதிர்காலம் மற்றும் பண்மை கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில், பாஜக இடம் பெறும் அணியை தோற்கடித்து , காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற - சமூக நீதி கட்சிகள் இடம் பெறும் அணியை வெற்றி பெறச் செய்யும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார்.

தமிமுன் அன்சாரியின் இந்த முடிவு அதிமுகவுக்கு எதிராக உள்ளதால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி தப்புமா ? என கேள்வி எழுந்துள்ளது.