அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் தமிழகத்தில் மழை வர வேண்டி யாகம் நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலிஸ்வரர் கோயிலில் முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் யாகம் நடைபெற்று வருகிறது.  இந்த யாகத்தில் பெண் சென்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் கலந்து கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை கூறியது, தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டும், இதற்காக மழை வேண்டும் என்பதற்காக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் யாகம் நடத்தப்பட்டது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மழை வராத காரணத்தினால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க 200 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் சென்னை மாநகரத்திற்கு மட்டும் 69 கோடி ஒதுக்கப்பட்டு ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படுவது இது ஒன்றும் புதிதல்ல, இதற்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா அந்த பிரச்சினையை எதிர் கொண்டு மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்த்தார் காவிரி நீரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர்.

8 மாதங்களுக்கு முன்பாகவே தண்ணீர் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர்களை அழைத்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். தண்ணீர் பிரச்சினை குறித்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களின் வாடிக்கை அது. மக்களுக்காக பணியாற்றுபவர்கள். அதிமுக தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம் மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறோம், நல்லது தான் செய்வோம். ஆர்ப்பாட்டம் செய்து எல்லாம் ஆட்சியை கலைக்க முடியாது. 

2 ஆண்டு காலமாக திமுக இந்த ஆட்சி இன்று போய் விடும், நாளை போய்விடும், பல அமாவாசைகள்  கணித்தார்கள், ஆனால் இங்கிருந்து ஒரு அம்மாவாசை ஓடிப் போய்விட்டது.  அது யாரென்று உங்களுக்கே தெரியும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரசியலுக்காக மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்வது திமுக என கூறினார்.