அ.தி.மு.க அரசின் ரிங் மாஸ்டர் மோடி தான் என்பதை ஒப்புக் கொள்வதாகவும் அதே சமயம் அமித் ஷா தான் தி.மு.கவின் ரிங் மாஸ்டர் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க உள்ளதாகவும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்று மக்களை சந்தித்து வருகிறார் தம்பிதுரை. அந்த வகையில் மக்கள் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அ.தி.மு.க அரசின் ரிங் மாஸ்டர் மோடி என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்தார். 

மோடி மத்திய அரசை இயக்குபவர். தற்போது அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் தான் உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இருப்பது தமிழகத்தில், அதாவது அ.தி.மு.க ஒரு மாநில அரசை நிர்வகித்து வருகிறது. அப்படிப்பார்த்தால் அதிகாரம் இல்லாத மாநில அரசை அதிகாரம் கொண்ட மத்திய அரசு இயக்குவது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில் மோடியை அ.தி.மு.க அரசின் ரிங் மாஸ்டர் என்று எதிர்கட்சிகள் கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஒப்புக் கொள்கிறோம். 

ஆனால் தி.மு.கவின் ரிங் மாஸ்டர் யாரென்று கேட்டால் நான் அமித் ஷாவைத் தான்சொல்வேன். அமித் ஷா சொல்கிறபடி தான் இப்போது தி.மு.க நடந்து கொள்கிறது. இதே போல் தி.மு.கவும் அமித் ஷா மூலமாகத்தான் சி.பி.ஐயை வைத்து அ.தி.மு.கவை மிரட்டி வருகிறது.

இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. விரைவில் அந்த ஆதாரங்களை வெளியிடவும் தயங்கப்போவதில்லை. தி.மு.கவுக்கும் – பா.ஜ.கவுக்கும் ரகசிய உறவு உள்ளது. இந்த ரகசிய உறவு விரைவில் அம்பலமாகும்.   இவ்வாறு தம்பிதுரை அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.