மத்தியில் ஆளும் மோடி அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே நிறைவேற்றித் தருவதுதான் எடப்பாடி அரசின் வேலை என்று தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல திட்டங்கள் அவரது மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி இலகுவாக நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி அரசில் உள்ள அமைச்சர்கள் எந்தவித விமர்சனங்களும் செய்வதில்லை. அந்த அளவுக்கு மோடிக்கு பயந்து கொண்டிருப்தாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மட்டும் அவ்வப்பொழுது மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையயில் கரூர் அருகே செய்தியாளர்களிடையே பேசிய தம்பிதுரை,  ஒட்டு மொத்த நிதியையும்  வைத்துக்கொண்டு மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது என  குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு மாநில அரசை நகராட்சியாக மாற்றி விட்டது என்றும்,  காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள்  மாநில அரசின் அதிகாரங்களை பறித்து கொண்டன என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

மோடி நல்லவர் தான் ஆனால்  மாநில அரசின்  நிதியை  மட்டும் அவர் கொடுப்பது இல்லை. என்றும் விளம்பரத்துக்காக மட்டுமே மத்திய அரசு திட்டங்களை அறிவிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தற்போது  பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது  தனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது  என்றும் தம்பிதுரை கடுமையாக பேசினார்.