அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கு வேட்டு வைக்கும் விதமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வருகிறார். 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில பேசிய தம்பிதுரை பாஜக அரசை கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும் பாஜகவை அதிமுகவால் தூக்கி சுமக்க முடியாது எனறும் நாங்கள் எங்களை பலப்படுத்தும் பணிகளைத் தான் பார்க்க முடியும் பாஜக ஒரு பெரும் சுமை என்றும் கடுமையாக பேசினார்.

தம்பிதுரையின் இந்த பேச்சு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் அதிமுக தலைவர்களையும்  அதிர்ச்சி அடையச் செய்தது . கூட்டணி கூடி வரும் நேரத்தில் இவர் இப்படி பேசுகிறாரே என இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரும் ஆதங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக பேச தம்பிதுரைக்கு அதிமுகவில் யார் அதிகாரம் கொடுத்தது என்றும்  ,அதிமுகவில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் தம்பிதுரைக்கு இல்லை என்றும் கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,  அவர் துணை சபாநாயகராக ஏன் தொடர்கிறார் என்றும் தெரியவில்லை என கேட்டிருந்தார்.

திருச்சியில் இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வேண்டும் என்றுதான் மல்லிக்கார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டார், துணை சபாநாயகர் பதவியை நாங்கள்  கேட்கவில்லை. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிகமான எம்.பி.க்களைக் கொண்டதாக அதிமுக இருந்தது. ஆகவே முறைப்படி அதிமுகவுக்கு வர வேண்டிய துணை சபாநாயகர் பதவியைத் தான்  கொடுத்துள்ளனர். ஏதோ பிச்சை  போட்டது போல பேசக்கூடாது என தெரிவித்தார்.

தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையும் வரவில்லை, கஜா புயலுக்கு கேட்ட நிதியும் வரவில்லை. இப்படி தமிழகத்துக்கு உதவாமல் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இதனை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும் தம்பிதுரை கடுமையாக பேசியுள்ளார்.