ஜெயலலிதா ஆட்சியைக் காப்பாற்றவே ஓ.பி.எஸ். அணியில் இருந்து எம்.எல்.ஏ. ஆறுகுட்டி விலகியுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனியாக சென்றபோது, முதலாவது நபராக ஆதரவு அளித்தவர் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி. இவர், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என பிளவு பட்ட நிலையில், ஓ.பி.எஸ்.-க்கு, முதன் முதலாக ஆறுகுட்டி எம்.எல்.ஏ. ஆதரவு அளித்தார். அதன் பிறகே மற்ற எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த நிலையில், ஆறுகுட்டி எம்.எல்.ஏ., ஒ.பி.எஸ். அணியினர் தன்னைப் புறக்கணிப்பதாகவும், அதனால் அந்த அணியில் இருந்து விலகுவதாகவும் நேற்று தெரிவித்திருந்தார்.

ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஆறுகுட்டி எம்.எல்.ஏ. விலகியது குறித்து மக்களவை துணை சபாநயகர் தம்பிதுரை, ஜெயலலிதா ஆட்சியைக் காப்பற்றவே ஓ.பி.எஸ். அணியில் இருந்து ஆறுகுட்டி விலகியுள்ளதாக கூறியுள்ளார்.

ஆறுகுட்டி யாருடைய நிர்பந்தத்திலும், ஓ.பி.எஸ். அணியை விட்டு விலகவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.