அதிமுக – பாஜக கூட்டணி பேச்சு இறுதி வடிவம் பெறவுள்ள நிலையில், துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பது குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவையில் தன்னை சேர்க்காமல், துணை சபாநாயகர் பதவியை வழங்கியதில் இருந்தே, தம்பிதுரை  பாஜக  மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோடியை விளாசி வருகிறார்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு  சசிகலாவின் தீவிர விசுவாசியாகி, அவர் சிறைக்குப்போனதும், எடப்பாடி அணிக்கு தாவினார். அணிகள் இணைந்த பின் டெல்லி  விவகாரங்களில், எல்லாம் நாம்தான்' என, நம்பியவருக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. 

தம்பிதுரையால், டில்லி அரசியல்வாதிகளிடம் அறிமுகப்படுத்தப் பட்ட, தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் இருவரும்  கூட்டணி சேர்ந்து, தாங்களாகவே, டெல்லி அரசியலை கையாளத்  தொடங்கியது தம்பிதுரையை அதிர்ச்சி அடையச் செய்தது.

மேலும் காவிரி  உட்பட பல விவகாரங்களுக்காக, தன் தலைமையில், எம்.பி.,க்கள் குழு சந்திக்க, பிரதமரிடம் நேரம் கேட்டார், ஆனால் தம்பிதுரை. அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை; இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினார். 

சொந்த கட்சியும், பாஜகவும்  ஒரேநேரத்தில் தன்னை ஓரங்கட்டுவதை, அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனக்கே தெரியாமல், தமிழகத்தை சேர்ந்த மூத்த அமைச்சர்கள், அடிக்கடி டெல்லி வந்து, பாஜக  தலைமையுடன் பேச்சு நடத்தியதை, அவரால் பொறுக்க முடியவில்லை.

இதையடுத்து தான் நாடாளுமன்றம் என்னும் களத்தில் இறங்கி வாளை சுழற்றத் தொடங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் போகும் இடமெல்லாம் சகட்டு மேனிக்கு பாஜகவை வறுத்தெடுத்து வருகிறார்.

அதே நேரத்தில்  பாஜகவுடனான கூட்டணியை விரும்பாத, அதிமுகவின்  ஒரு பகுதியினர், இதை ரசித்ததால், இன்னும் உத்வேகத்துடன் அவர் பேசி வருகிறார்.
கூட்டணி தொடர்பாக, பா.ஜ.,வின் நெருக்கடியை  பகிரங்கமாக கூற முடியாத முக்கிய தலைவர்கள், எம்.பி.,க்கள்  பலரும், தம்பிதுரையிடம் தனிப்பட்ட முறையில், 'எங்களால் முடியவில்லை. நீங்களாவது பேசுங்கள்' என்றதும் உற்சாகமானார்.

பா.ஜ.,வுடனான கூட்டணி உறுதியாகி விட்டது என்பது, தம்பிதுரைக்கு தெரியும்; இருந்தும், விமர்சிக்கிறார் என்றால், காரணங்கள் உள்ளன. வயதில் மூத்தவரான அவருக்கு, இன வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன.

மே மாதத்துடன், எம்.பி., பதவிக்காலம் முடியும் நிலையில், அடுத்து மாநிலங்களவை எம்.பி.பதவி  கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே தான் தம்பிதுரை இறங்கி அடிப்பதாக கூறப்படுகிறது.