தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டியது சரியான செயல் அல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது என்றால், பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கான எதிர்ப்பு, உலகின் கவனத்தையே ஈர்த்தது. ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைக்க நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக திமுக தலைமையிலான தோழமை கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழர் கலை இலக்கிய பேரவை ஆகியவை சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

பிரதமரை திரும்பி போக சொல்லும் வகையில் GoBackModi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டானது. இதனால் காவிரி விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரிக்காக ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக திரண்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்திருந்தால், 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியிருக்க முடியாது. தற்போது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தும் திமுகவினரோ அழகிரியோ காவிரிக்காக ராஜினாமா செய்யவில்லை. 

ராணுவ கண்காட்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டியது சரியான செயல் அல்ல தம்பிதுரை வேதனை தெரிவித்துள்ளார்.