நாடாளுமன்றத்தில் இருந்து கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்துவதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள், நாடாளுமன்றத்தை 15வது நாளாக இன்றும் முடக்கினர். நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து போராடியும் மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. 

நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுக்கும் மேல் இருந்தால்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். 37 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவால் எப்படி தீர்மானம் கொண்டு வர முடியும்? காவிரிக்காக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாடாளமன்றத்தில் காங்கிரஸ் ஆதரிக்குமா? என்பதை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் பேசி ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

அதிமுக எம்எபிக்களை பதவி விலகச் சொல்வது ஸ்டாலினின் சித்து விளையாட்டுகளில் ஒன்று. நாடாளுமன்றத்தில் இருந்து கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவும், அரசியல் சித்து விளையாட்டுக்காகவும் எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்துவதாக தம்பிதுரை குற்றம்சாட்டினார்.