தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு ஸ்டாலின் வலியுறுத்துவதாக தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள், நாடாளுமன்றத்தை 15வது நாளாக இன்றும் முடக்கினர். நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் நாடாளுமன்றத்தை முடக்குவது மட்டுமே அழுத்தம் கொடுப்பதாகிவிடாது. எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். 

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று அதிமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, ஸ்டாலின் வலியுறுத்தலை விமர்சித்து பதிலளித்தார்.

அப்போது பேசிய தம்பிதுரை, தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு ஸ்டாலின் கூறுகிறார். ஆந்திராவில் செம்மரம் வெட்டவந்தவர்கள் என்று கூறி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டுகொள்ளவில்லை. தமிழர்களை சுட்டுக் கொல்வது மட்டுமல்லாமல் தமிழகத்தை தொடர்ந்து வஞசிக்கும் ஆந்திர அரசுக்கு ஸ்டாலின் ஆதரவு அளிக்கச் சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்லி வலியுறுத்துவது ஸ்டாலினின் சித்து விளையாட்டுகளில் ஒன்று. கனிமொழியை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்காகத்தான் எம்பிக்களை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வலியுறுத்துவதாக தம்பிதுரை விமர்சித்தார்.