thambidurai condemns thambidurai

தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகக் கூறும் கமல், அரசியலில் இருந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதாகக் கூறி நிகழ்ச்சியை தடை செய்யவும், கமல் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்பு புகார் அளித்துள்ளது.

இது குறித்து, நடிகர் கமல் ஹாசன் விளக்கமளிக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அப்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் தமிழகத்தில் சிஷ்டம் சரியில்லை என்றும், ரஜினிகாந்த் இன்று சொல்லுகிறார் நான் முன்னரே கூறியதாகவும் கமல் தெரிவித்தார்.

நடிகர் கமல் ஹாசனின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புக்குரல் எழுந்து வருகிறது. கமலின் பேச்சுக்கு கருத்து தெரிவித்து எம்.எல்.ஏ. கருணாஸ், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றால் களத்தில் இறங்கி போராடலாம் என்றும் சிஸ்டத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இது குறித்து கருத்து தெரிவிக்கையில், அரசியலில் இருந்து கமல் கருத்து கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் எம்.பி. தம்பிதுரை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊழல் மலிந்து விட்டதாகக் கூறும் கமல், அரசியலில் இருந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஊழல் இருந்தால் நீதித்துறையை நாடலாம். ஆனால் பொத்தாம் பொதுவாக கருத்துக்களைக் கூறக்கூடாது என்றும் எம்.பி. தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.