பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுகவை பாஜக அடிமை போல நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக பாஜகவுக்கு எதிராக மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை கருத்து தெரிவித்து வருகிறார். ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற விவகாரத்தில், ராகுல் காந்தியின் கருத்தை தம்பிதுரையும் எதிரொலித்தார். இதேபோல 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்திலும் பாஜகவை தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்தார். 

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்துவருகிறார்கள். இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. தமிழக பாஜகவும் அதிமுகவோடு கூட்டணி அமைக்க விரும்புகிறது. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி சேர வேண்டும் என்று துக்ளக் விழாவில் எஸ். பேசியதற்கும் தம்பி துரை கடும் கண்டனம் தெரிவித்தார். 

‘பாஜகவை தூக்கி சுமக்க அதிமுக என்ன பாவம் செய்தது’ என்று கொந்தளித்தார். இதனால், தற்போது தமிழக பாஜகவினர் தம்பிதுரையை விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து  தம்பிதுரை கருத்து தெரிவித்ததால், அவர் ஓர் அணியாகப் பிரிந்து கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளியானது. இதுபற்றி செய்திகளும் வெளிவந்தன. 

ஆனால், இதை தம்பிதுரை மறுத்துள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்த அவர், “ நான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்தி தவறானது. எனக்கு அப்படி எதுவும் திட்டமில்லை. தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்கு தகுதியும் இல்லை. பாஜக கட்சி அதிமுகவை அடிமைபோல நடத்துகிறது என்றே கூறி இருந்தேன். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இனிதான் முடிவெடுக்க வேண்டும்” என்று தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.