ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகிய இரு அணிகள் இணைந்தாலும், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக தொடருவார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தனிரூட்டில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும், ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கி ஆட்சியில் தொடர வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் கடந்த இரு நாட்களாக குழுவாக கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இன்று நடை பெற்ற கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்ட மன்னார் குடி குடும்பத்தினரை முற்றிலுமாக நீக்கி விட்டு, அதிமுகவை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை பெறப்பட்டது என்றும்  ஜெயகுமார் தெரிவித்தார். அதே நேரத்தில் ஓபிஎஸ்தான் முதலமைச்சராவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சசிகலா  அணியைச் சேர்ந்தவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசும் போது  அமைச்சர்கள் முடிவு எடுத்தாலும், முதலமைச்சராக எடப்பாடி  பழனிசாமி தொடர்வார்  என்றும் ஓபிஎஸ்டன்  பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காணப்படும் என்று தெரிவித்தார்.

திடீரென தம்பிதுரை இப்படி குறுக்குச்சால் ஓட்டி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.