thalavaai sundaram statement against kp munusamy

கே.பி.முனுசாமியை பக்கத்தில் வைத்து கொண்டு அப்போலோவில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் டி.டி.வி.தினகரனுக்கு இல்லை என்று அதிமுக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது மக்கள் கொண்டிருக்கும் அன்பை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அவரைப் பற்றி அவதூறு அள்ளி வீசுகிறார்.

அதிமுக தேர்தல் கூட்டணி அமைத்த நேரங்களில் தனது பணி என்னவாக இருந்தது என்பது பற்றியும், தன் மீது ஜெயலலிதா கொண்டிருந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்றும், 2001 தேர்தலில் உருவாக்கப்பட்ட அதிமுக தலைமையிலான கூட்டணியை பற்றியும், அந்த கூட்டணி அமைவதற்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றியும் தான் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டார். அதை கே.பி.முனுசாமி தவறாக புரிந்து கொண்டிருப்பதை போல 2014 தேர்தலைப் பற்றி அல்ல.

டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா கிழித்த கோட்டை தாண்டாத விசுவாசி. ஜெயலலிதாவின் ஒவ்வொரு வார்த்தையையும் அன்புக் கட்டளையாக ஏற்று செயல்பட்டவர். ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவர்.

அந்த நம்பிக்கைக்குரிய உறவை சிதைத்துவிட வேண்டும் என்பதற்காக யார், யார் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதும், அவை அனைத்தையும் தன் ஆன்மிக உணர்வுகளால் அமைதியாக ஏற்று ஜெயலலிதாவுக்காக அனைத்தையும் மலர்ந்த முகத்துடன் தாங்கி கொண்டு, அமைதி காத்தவர் டி.டி.வி.தினகரன் என்பதும் கே.பி. முனுசாமிக்குத் தெரியும்.

அவர் சேர்ந்துள்ள கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். கே.பி.முனுசாமியை போன்ற ஒருவரை சாட்சியாக வைத்து கொண்டு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் டி.டி.வி.தினகரனுக்கு இல்லை. உண்மைக்கு மாறாக பேச வேண்டிய கட்டாயமும் அவருக்கு இல்லை என்பதை கே.பி.முனுசாமி நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

அரசியலில் ஓர் இலக்கை தனக்கென நிர்ணயித்து கொண்டு அந்த இலக்கை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவது, எதை வேண்டுமானாலும் செய்வது என்ற குணம் கொண்டவர் அல்ல டி.டி.வி.தினகரன்.

அவருடைய உழைப்பையும், உண்மை விசுவாசத்தையும் கண்டு மகிழ்ந்து தான் 1999ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை வெற்றி வேட்பாளராகவும், 2004ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் ஜெயலலிதா பதவி வழங்கினார்.

கே.பி.முனுசாமி குறிப்பிடுவதைப் போல அரசியல் அங்கீகாரம் வேண்டி புதிய தேடல்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் டி.டி.வி.தினகரனுக்கு இல்லை. ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், அமைப்பு செயலாளராகவும், பொருளாளராகவும் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று பணியாற்றியவர் டி.டி.வி.தினகரன்.

அமைதி, ஆன்மிக தேடல், நான்கு பேர் நன்மை பெறும் வகையில் வாழத் துடிக்கும் பொருளார்ந்த வாழ்வு என வாழும் டி.டி.வி.தினகரனை பற்றி நன்கு அறிந்த கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.