வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. வழக்கம் போல அரசியல் பேசாமல், குட்டி ஸ்டோரிஸ் மட்டும் சொன்னார் விஜய்.
தமிழக அரசியல் களத்திற்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலே அதிக காலம் முதல்வர்களாக இருந்தவர்கள் திரைத்துறையில் ஜொலித்தவர்கள்தான்.
அந்தத் தாக்கம் திரையில் ஹீரோவாக ஜொலித்தவர்களுக்கும், ஒருகட்டத்தில் அரசியல் ஆசையைக் கட்டி எழுப்பியது. வெள்ளித்திரையின் வெளிச்சத்தினால், அரசியல் களத்தில் உச்சத்திற்குச் சென்றவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அதே வெள்ளித்திரையில் வியத்தகு சாதனை செய்த சிவாஜியை அரசியல் களம் அதோகதி ஆக்கிவிட்டது. விஜயகாந்த் அரசியலில் ஆரம்பத்தில் நல்ல இடத்தை பெற்றாலும், தற்போது உடல்நல குறைவு ஏற்பட்டு சில வருடங்களாக ஓய்வில் இருக்கிறார்.
இதையும் படிங்க.. வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!
தேமுதிக தற்போது தடுமாறி வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி, அதிசயம் அற்புதம் நடக்கும் என்று கூறி கடைசியில் பின்வாங்கி விட்டார். கமல் ஹாசனோ படத்தில் வருவது போல கட்சி ஆரம்பித்து பயணத்தை ஆரம்பித்துவிட்டார். தற்போது விஜய் அந்த பட்டியலில் இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் உரசல், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, சர்க்காரில் அதிமுக அட்டாக் என அரசியல் ஆசையை அவரும் விடவில்லை, அரசியலும் விடவில்லை. இந்த நிலையில் நேற்று விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. வழக்கம் போல அரசியல் பேசாமல், குட்டி ஸ்டோரிஸ் மட்டும் சொன்னார் விஜய்.
நடிகர் விஜய் அரசியலை விட்டாலும், அவரது ரசிகர்கள் அவரை விடமாட்டார்கள் போல. தற்போது புது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். மதுரை விஜய் ரசிகர்கள் ஆளும் கட்சியான திமுகவை சீண்டியிருக்கிறார்கள். அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், எத்தனை அரசியல் வாரிசுகள் வந்தாலும் SACயோட வாரிசு கிட்ட நெருங்க முடியாது என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு உதயநிதி அமைச்சர் ஆன போது, இதேபோல சர்ச்சைக்குரிய போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டினார்கள். அதில் ராகுல் காந்தி, ஸ்டாலின், துரை வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றது. மேலும் அதில், எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே என்று எழுதப்பட்டிருந்தது. உதயநிதியை குறிவைத்து தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தாக்கி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க.. ஆப்ரேசன் 2024 கேம்! தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்.. முடிக்கும் ஜே.பி நட்டா - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!