நேற்று முதல் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் தளபதி ஆகியுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

திராவிட கட்சிகளை பொறுத்தவரை பெயருக்கு முன்னால் அடைமொழி வைத்து அழைப்பது என்பது ஒரு பாரம்பரியமாகவே கருதப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிறஞர், கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்கிற வரிசையில் ஸ்டாலின் இதுநாள் வரை தளபதி என்று அழைக்கப்பட்டு வந்தார். திமுகவின் தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகும் கூட மேடையில் அவரை தளபதி என்றே திமுக நிர்வாகிகள் குறிப்பிட்டு வந்தனர்.

 

தலைவரான பிறகு ஏன் தளபதியை தளபதி என்று கூப்பிட வேண்டும் என்று சிலர் கேட்டு வந்தனர். இதனை அடுத்து இனி ஸ்டாலினை தளபதி என்கிற அடைமொழியுடன் அழைக்க வேண்டாம், குறிப்பிட வேண்டாம், போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்டாலினை கட்டாயமாக தலைவர் என்று தான் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியை இனி தளபதி என்று அழைக்க வேண்டும் என்று நேற்று அனைவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர்கள், விளம்பரங்களிலும் இனி தளபதி உதயநிதி என்றே குறிப்பிட வேண்டும் என்றும்ஆணையிடப்பட்டுள்ளது. இதனை ஏற்று நேற்றே பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தளபதி உதயநிதி என்கிற வாசகங்களை காண முடிந்தது. 

அதாவது தனது தந்தையான திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தனது முதல் பணி என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக தலைவரை முதலமைச்சராக்கும் பொறுப்பை ஏற்றதால் இன்று முதல் நீ தளபதி என்று அழைக்கப்படுவாய் என்கிற ரீதியில் இந்த முடிவை திமுக தலைமை எடுத்துள்ளது. 

இனி கட்சியின் சீனியர்களும் கூட கூட்டங்களில் பேசும் போது உதயநிதியை தளபதி என்றே அழைக்க வேண்டுமாம். அதற்கு ஏற்ப பயிற்சி எடுக்கவும் சிலர் ஆரம்பித்துள்ளனர். குழப்பமாக இருந்தால் தந்தையை பெரிய தளபதி என்றும் மகனை சின்ன தளபதி என்று கூப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான் என்று நக்கலடிக்கிறார்கள் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர்.