இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் , சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு  குறித்து பேசினார். அப்போது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது தங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

தா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்..